aganazhigai@gmail.com | +91 701 013 9184

'விளிம்புக்கு அப்பால்’ - புதிய தமிழ்ப் படைப்பாளிகளின் சிறுகதைகள்

  • பொன்.வாசுதேவன்

கதைகள் நம் வாழ்வோடு காலம்காலமாக இருந்து வருகின்றன. வாய்மொழிக் கதைகளான ராமாயணம், மகாபாரதம், புராணக் கதைகள், கிராமியக் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், மரியாதைராமன் கதைகள், தெனாலிராமன் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள் போன்றவற்றைக் கேட்டு வளர்ந்தவர்கள் நம் முன்னோர்கள். அவை அச்சு வடிவமாக அடுத்தடுத்த கட்டங்களில் வளர்ச்சியடைந்தன. அந்த வகையில் முதன்முதலில் அச்சில் வெளிவந்தது வீரமாமுனிவரின் பரமார்த்த குரு கதைகள். பின்னர் ஈசாப்பின் நீதிக்கதைகள், திராவிட பூர்வகாலக் கதைகள், தெனாலிராமன் கதைகள் போன்றவை தமிழில் அச்சாகின. இதைத் தொடர்ந்து வீராசாமி செட்டியார் (1855) தாம் எழுதிய உரைநடைக் கட்டுரைகளைத் தொகுத்து ‘விநோத ரஸமஞ்சரி’ என்று வெளியிட்டார்.  செல்வ கேசவராய முதலியாரின் ‘அபிநவக் கதைகள்’ என்ற உரைநடைத் தொகுப்பு வாசிக்கிறவர்களின் பாராட்டைப்பெற்றது. 


ஆரம்பகாலச் சிறுகதை ஆசிரியர்களுள் அ.மாதவையா குறிப்பிடத்தக்கவர்.  இவரது ‘குசிகர் குட்டிக் கதைகள்’ ஆங்கிலத்திலும், தமிழிலும் வெளியானது. இவர் பிராமணச் சமூகத்தில் காணப்பட்ட குழந்தைத் திருமணம், விதவைகள் துயர், வரதட்சணைக் கொடுமை முதலிய சீர்கேடுகளைப் பற்றித் தமது கதைகளின் மூலம் மிக வன்மையாகக் கண்டித்தவர். ரவீந்திரநாத் தாகூரின் பதினொரு சிறுகதைகளை மொழிபெயர்த்து பாரதியார் வெளியிட்டார். பாரதியார், வ.வே.சு. ஐயர், நாரண துரைக்கண்ணன், தி.ஜ.ரங்கராஜன் எழுதிய சிறுகதைகளும் வெளியாகத் தொடங்கின. இப்படியான வெளியீடுகளால் தமிழ்நாட்டில் கதை கேட்பது மட்டுமல்ல, படிக்கும் வழக்கமும் அதிகமானது. 


தொல்காப்பியத்தில்,
        ‘பொருள் மரபில்லாப் பொய்ம்மொழி யானும் 
        பொருளொடு புணர்ந்த நகைமொழி யானும் என்று 
        உரைவகை நடையே நான்கென மொழிப’
என்ற சூத்திரம், உரைநடை எந்தெந்த இடங்களில் வரும் என்பதைக் குறித்து வருகிறது. 


'பாடலாக இல்லாமல் உரைநடையாக வரும் நூல்களும், பொருளோடு சேராத கட்டுக்கதை நூல்களும், பொய் எனக் கூற முடியாமல் மெய்யென உணரப்பட்டு நகைச்சுவை பயக்கும் நூல்களும் என உரைநடை நூல்கள் நான்கு வகைப்படும்' என்பது இதன் பொருள்.

 
உரைநடை வடிவத்தின் அடுத்த கட்டமான தமிழ்ச் சிறுகதைகளின் வளர்ச்சி பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து சீராகவும், நிதானமாகவும் மெல்ல வளர்ந்துகொண்டே வருகிறது. மேலைநாட்டு மரபை ஒட்டிய நவீன தமிழ்ச் சிறுகதை முயற்சிகள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலக் கட்டத்தில் மேற்கொள்ளப்பட்டன. தற்போது உலகத்தரம் வாய்ந்த சிறுகதைகள் தமிழ்ச் சிறுகதைச் சூழலில் எழுதப்படுகின்றன. அயல் இலக்கியங்களை விரைந்து மொழிபெயர்த்து தமிழில் கொண்டு வந்து சேர்க்கும் அளவுக்கு, தமிழ்ப் படைப்புகள் வேற்று மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம். 


தமிழ்ச் சிறுகதையின் முன்னோடியாக பாரதியாரைக் குறிப்பிடலாம். வடிவம் சார்ந்து முழுமையற்ற தன்மையுள்ளதாக கருதப்பட்டாலும் அவரிடமிருந்துதான் சிறுகதை மரபு தொடங்குகிறது. ‘துளசிபாய் என்ற ‘ரஜபுத்திர கன்னிகையின் சரித்திரம்’ என்ற புனைவை 1905ல் அவர் எழுதினார். புதுச்சேரியில் வசித்தபோது 1910ல் ‘ஆறில் ஒரு பங்கு சிறிய கதை’ என்ற கதைத் தொகுப்பை அவர் வெளியிட்டார். சிறுகதை, ஐரோப்பியக் கலைவடிவமாகக் கருதப்பட்ட காலத்தில் அதன் பாணியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சிறுகதைகளை பாரதி எழுதினார். வாய்மொழிக்கதை சொல்லும் உத்தியையே தன்னுடைய சிறுகதைகளில் அவர் பயன்படுத்தினார். பாரதி எழுதிய கதைகள் ‘பாரதியார் கதைகள்’ என்ற தலைப்பில் புத்தகமாகவும், இணையத்திலும் வாசிக்கக் கிடைக்கின்றன. நீங்கள் வாசித்துப் பார்த்தால் புரிந்துகொள்ளலாம். ‘ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்’ என்பதாக இல்லாமல் பேச்சு வழக்கில் உரையாடலைப் பயன்படுத்தி எழுதப்பட்ட கதைகள் அவை. 
அவருக்கு அடுத்தபடியாக, நவீன சிறுகதையின் தந்தையாக வ.வே.சு. ஐயரைச் சொல்லலாம். அவர் எழுதிய ‘குளத்தங்கரை அரச மரம்’ கதை தமிழின் முதல் சிறுகதையாகச் சுட்டப்படுகிறது. ‘விவேகபோதினி’ இதழில் 1915ல்  வெளியான இந்தக் கதை, தாகூர் எழுதிய ‘காட்டேர் கதா’ என்ற வங்கக் கதையின் தழுவல் என்று கூறப்படுகிறது. ‘மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள்’ என்ற ஐந்து கதைகளை உள்ளடக்கிய சிறுகதைத் தொகுப்பிலும் இந்தக் கதை இடம்பெற்றது. ‘மணிக்கொடி’ எழுத்தாளர்களால் வ.வே.சு. ஐயர் பெரிதும் கொண்டாடப்பட்டார். 


அதன் பின்னர் 1930களில் தமிழ் இலக்கியத்தின் வடிவத்தையும், உள்ளடக்கத்தையும் பத்திரிகைகள் தீர்மானம் செய்த காலம் வந்தது. விகடன், கலைமகள், சரஸ்வதி, மணிக்கொடி என எல்லாப் பத்திரிகைகளும் சிறுகதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடத் தொடங்கின. தேச விடுதலை, சமூக அக்கறை, சுய விசாரம், ஒழுக்கப் போதனைகள், தத்துவம் சார்ந்த பல சிறுகதைகள் எழுதப்பட்டன. மேல்தட்டு மக்களும் நடுத்தர வர்க்கத்தினரும் சிறுகதைகளை வாசிப்பதில் ஆர்வம் காட்டினர். 


அப்போதைய பத்திரிகைகளில் ஆசிரியர்களாக வெவ்வேறு காலகட்டங்களில் இருந்தவர்களும் சிறுகதைகள் இடம்பெறச் செய்வதில் ஆர்வம் காட்டினர். விகடன் ஆசிரியராக கல்கியும், கலைமகள் ஆசிரியர்களாக இருந்த கி.வா.ஜகந்நாதன், கா.ஸ்ரீ.ஸ்ரீ., மணிக்கொடி ஆசிரியராக இருந்த வ.ரா., பி.எஸ். ராமைய்யா ஆகியோரும், சிறுகதைகளுடன், காண்டேகர், பங்கிம் சந்திர சட்டர்ஜி, சரத் சந்திரர் போன்றோரின் மொழிபெயர்ப்புக் கதைகளையும் வெளியிட்டனர். 


கு.ஸ்ரீனிவாசன், தி.சு.சொக்கலிங்கம், வ.ரா. ஆகிய மூவரும் இணைந்து ‘மணிக்கொடி’ இதழைத் தோற்றுவித்தனர். தமிழ் உரைநடை, சிறுகதை வளர்ச்சியில் 1933 முதல் 1940 வரை வெளியான மணிக்கொடி இதழின் பணி முக்கியமானது. வ.ரா. புதிய எழுத்தாளர்களின் படைப்புகளை இடம்பெறச் செய்வதில் ஆர்வமுள்ளவராயிருந்தார். மணிக்கொடி எழுத்தாளர்கள் என அறியப்பட்டவர்களும் உருவாகினர். 1930-40கள் பல நல்ல சிறுகதையாசிரியர்களின் கதைகள் தோன்றிய காலம். 


வ.ரா., கல்கி, கு.ப.ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, புதுமைப்பித்தன், பி.எஸ்.ராமையா, க.நா.சு. போன்ற பல எழுத்தாளர்களின் படைப்புகள் வெளிவரத் தொடங்கின. பெண்கள் பெயரில் ஆண்கள் எழுதிய கதைகளும் வெளிவந்தன. கேலியும் கிண்டலும் கலந்த சமூகச் சாடலுடன் எழுதுபவராக அடையாளம் காணப்பட்ட ‘புதுமைப்பித்தன்’ என்ற சொ.விருத்தாச்சலம் குறிப்பிடத்தக்க சிறுகதை ஆக்கங்களை எழுதிப் பங்களித்தார். சிறுகதையின் வடிவம், உள்ளடக்கம், சொல்முறை சார்ந்த பல்வேறு கருத்துகளும், விவாதங்களும் உருவாயின. 


1940-50களில் சிறுகதை வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவு இருந்தது. அதற்குப் பிறகான பத்து வருடங்களில் சிறுகதையின் போக்கும் வளர்ச்சியும் சற்றே தடைப்பட்டது. விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலான சிறுகதை எழுத்தாளர்களையே  1950-59ல் குறிப்பிட முடியும். வ.ரா.வை முன்னிருத்தி 1955ல் வெளிவந்த ‘சரஸ்வதி’ இதழ் ஜெயகாந்தனின் பல சிறுகதைகளை வெளியிட்டது. பின்வந்த வருடங்களில் சிறுகதை மீண்டும் தழைத்து வளரத் தொடங்கியது. 


இந்த காலகட்டத்தில், கரிச்சான் குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம், ரா.பாலகிருஷ்ணன், விந்தன், மு.சிதம்பர ரகுநாதன், நா.பார்த்தசாரதி, வை.மு.கோதைநாயகி அம்மாள் போன்றவர்களும், அண்ணா, மு.வரதராசனார், ஜெயகாந்தன், கி.ரா. என்ற கி.ராமச்சந்திரன், சிதம்பர சுப்பிரமணியன், டி.எஸ். சொக்கலிங்கம், சங்கு சுப்பிரமணியன், மு.வரதராசன், அகிலன், ராஜாஜி, கே.எஸ்.வேங்கடரமணி, சிட்டி, சங்கரராம், க.நா.சு., பிரமிள், ஆர்.சண்முகசுந்தரம், கு.அழகிரிசாமி, மௌனி, லா.ச.ராமாமிர்தம், தொ.மு. சிதம்பர ரகுநாதன், ஜீவா, விந்தன், ரா.கி.ரங்கராஜன், தி.ஜானகிராமன், சுந்தர ராமசாமி  வல்லிக்கண்ணன் போன்ற சிறுகதையாசிரியர்களும், அநுத்தமா, லட்சுமி, சூடாமணி, ராஜம்கிருஷ்ணன், கோமகள், சரஸ்வதி ராம்நாத் போன்ற பெண் எழுத்தாளர்களும்  எழுதத் தொடங்கினர். இவர்களில் சிலர் சிறுகதை இலக்கியத்திலும், சிலர் நாவல் இலக்கியத்திலும், சிலர் இவ்விரண்டு இலக்கிய வகைமைகளிலும் எழுதியுள்ளனர்.


ஐரோப்பிய இலக்கியங்களின் தாக்கத்திலும், உலக இலக்கிய வாசிப்பின் உந்துதலிலும் தமிழில் பல சிறுகதைகள் வெளியாகத் தொடங்கின. சமூகக் கதைகளும், சரித்திரக் கதைகளும், தனித்தமிழ், முற்போக்கு, மார்க்சிய, தலித்திய, பெண்ணிய சிந்தனை அடிப்படையிலான கதைகளும், அச்சு இயந்திரத்தின் பசிக்குத் தீனிபோட எழுதப்பட்ட எழுத்துகளும் குவிய ஆரம்பித்தன. 


எழுபதுகளிலும் எண்பதுகளிலும் அதற்குப் பிறகும் சா.கந்தசாமி, இந்திரா பார்த்தசாரதி, ந.முத்துசாமி, அசோகமித்திரன், நீல பத்மநாபன், அசோகமித்திரன், கி.ராஜநாராயணன், ஆ.மாதவன், வண்ணநிலவன், வண்ணதாசன், சுஜாதா, நவபாரதி, சுப்பிரமணிய ராஜு, நாஞ்சில் நாடன், எம்.எஸ்.கல்யாணசுந்தரம், பொன்னீலன், ஆர்.சண்முகசுந்தரம், பாலகுமாரன், மாலன், சுப்ரமண்யராஜு, எஸ்.சம்பத், சார்வாகன், பா.செயப்பிரகாசம், பிரபஞ்சன், கிருஷ்ணன் நம்பி, ஜி.நாகராஜன், சு.சமுத்திரம், மா.அரங்கநாதன், எக்பர்ட் சச்சிதானந்தம், எஸ்.பொன்னுத்துரை, அம்பை, கந்தர்வன், தஞ்சை ப்ரகாஷ், மேலாண்மை பொன்னுச்சாமி, திலிப்குமார், ராஜேந்திர சோழன், வாஸந்தி, சிவசங்கரி, கிருத்திகா, லஷ்மி, சுமதி, க்ருஷாங்கினி, நாகூர் ரூமி, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி, சாருநிவேதிதா, இமையம், சுரேஷ்குமார இந்திரஜித், சுப்ரபாரதி மணியன், நகுலன், ஆதவன், விமலாதித்த மாமல்லன் ரவிக்குமார், பூமணி, பாமா, பாவண்ணன், பெருமாள் முருகன், பா.வெங்கடேசன், அழகிய பெரியவன், ஆதவன் தீட்சண்யா, பவா செல்லத்துரை, அ.முத்துலிங்கம், யுவன் சந்திரசேகர், எஸ்.ஷங்கர நாராயணன், ச.தமிழ்ச்செல்வன், வேல ராமமூர்த்தி, கண்மணி குணசேகரன், சி.மோகன், கோபிகிருஷ்ணன், ரமேஷ் பிரேம், பாதசாரி, கௌதம சித்தார்த்தன், உமா மகேஸ்வரி, ஜே.பி.சாணக்யா, யூமா வாசுகி, பாஸ்கர் சக்தி, க.சீ.சிவகுமார் (பட்டியல் முழுமையாகவும், காலவரிசைப்படியும் குறிப்பிடப்படவில்லை. நினைவிலிருந்து எழுதியவை. விடுபடல்கள் இருக்கலாம்.) போன்ற பலர் சிறுகதைப் படைப்புகளில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாகத் தடம் பதித்துள்ளனர். சமகாலத்தில் சிறப்பாக எழுதுகிற பல சிறுகதையாசிரியர்களைப் பற்றியும் நாம் அறிந்திருக்கிறோம்.


கதை சொல்லும் முறை, உத்தி ஆகியவற்றில் பல புதிய வடிவங்கள் சிறுகதைகளில் தோன்றின. அதற்குப் பின்பான காலகட்டங்களில் சிறுகதைகளில் எழுந்த நவீன எழுச்சிகளும், வடிவங்களும் பெரும்பாலும் நாம் அறிந்தவையாகவே இருக்கும். மேற்குறிப்பிட்ட தகவல்கள் அனைத்துமே தொகுக்கப்பட்டவை என்பதால் எனது தேடல்களில் அதில் சில விடுபடல்களும் இருக்கலாம். நூற்றாண்டைக் கடந்து பல்வேறு வடிவ மாற்றங்களையும், உத்திகளையும் தன்னுள் ஏற்றித் தன்னை மாற்றிக்கொண்ட சிறுகதை, இன்று தன் விழுதுகளைப் பரவலாக்கியபடி வளர்ந்து வந்துள்ளது.
••


வாசிப்பின் ஆரம்ப நாட்களில் எல்லோரையும்போலவே நானும் கவிதைகள்தான் எழுதத் தொடங்கினேன். பள்ளி நாட்களில் படிக்க ஆரம்பித்து ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது கவிதைகள் எழுதத் தொடங்கினேன். ‘கவிதைப் பூங்கா’ என்ற கையெழுத்துப் பிரதியை கார்பன் தாள் வைத்து மூன்று இதழ்கள் தயாரித்து, பள்ளி நூலகத்தில் ஒன்று, மதுராந்தகம் கிளை நூலகத்தில் ஒன்று என யாருக்கும் தெரியாமல் வைத்துவிடுவேன். என்னிடம் ஒரு பிரதி இருக்கும். ஆசிரியர் என்று என் பெயரைப் போட்டு மகிழ்ந்துகொண்டேன். யாரும் எந்த ஆதரவோ, எதிர்வினையோ தெரிவிக்கவில்லை. ரொம்பவும் அபத்தமான கவிதைகள் அவை. 


அதன் பிறகு நூலகத்தில் வித்தியாசமான வடிவமைப்பு காரணமாக முதலில் என்னை ஈர்த்த அன்னம் வெளியீடுகள், நவகவிதை வரிசை, கலைஞன் பதிப்பகம் வெளியிட்ட புத்தகங்கள் போன்றவைதான் என் வாசிப்பையும், கவிதை பற்றிய அணுகுதலையும் மாற்றியது. பாலா எழுதிய ‘சர்ரியலிஸம்’, பிரமிளின் ‘தமிழின் நவீனத்துவம்’, கார்த்திகா ராஜ்குமார் எழுதிய சிறுகதைத் தொகுப்பான ‘அவன் அவள் அவர்கள்’ இந்த மூன்று புத்தகங்களும் நன்றாக நினைவிலிருக்கின்றன. என்னுடைய வாசிப்பு குறித்த பார்வையை மாற்றியதில் இந்தப் புத்தகங்களுக்கு முக்கியப் பங்குண்டு என்று நான் கருதுகிறேன். ‘நான்’ என்பது என்ன என்பது மாதிரியான கேள்விகள் எழும். புரிந்தும் புரியாமலும் நாவல், சிறுகதைகள், கட்டுரைகள் என நிறைய வாசித்தேன். வாசிக்கும்போதெல்லாம் மனம் படைப்பூக்க மனநிலைக்கு ஆட்பட்டுக்கொண்டிருந்தது. இவையெல்லாம் பனிரெண்டாம் வகுப்புக்குள்ளான காலத்தில் நிகழ்ந்தவை. 


பிறகு கல்லூரியில் சேர்ந்த பிறகு என்னுடைய தமிழ்ப் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் மூலமாக எனக்குக் கணையாழி இதழும், க்ரியா பதிப்பகமும் அறிமுகமானது. அதிலிருந்து மேலேறித் தாவித்தாவி என்னுடைய வாசிப்பைப் பண்படுத்திக்கொண்டேன். எல்லா சிறுபத்திரிகைகளையும் தேடித்தேடி வாங்கிப் படித்தேன். என்னுடைய ஆரம்ப காலக் கவிதைகள் பெரும்பாலும் உணர்ச்சிப் பீறிடல்களாகவே இருந்து தொலைத்தன. நான் எழுதுவதெல்லாம் கவிதைகள் என்றே அதுவரை நம்பிக்கொண்டிருந்தேன். அந்தப் பூச்சுகள் உதிர்ந்து நான் கவிதைகள்தான் எழுதுகிறேன் என்ற நம்பிக்கை வந்த பிறகு சில கவிதைகளை 1989ல் விருட்சம் இதழுக்கும், கணையாழி இதழுக்கும் அனுப்பி வைத்தேன். அனுப்பிய அடுத்த மாதமே விருட்சம் இதழில் அறிமுகக் கவிஞர் என்ற குறிப்புடன் என்னுடைய முதல் கவிதை வெளியானது. அதற்கடுத்த மாதத்தில் கணையாழியில் ‘மொழி’ என்ற தலைப்பிலான கவிதையும் வெளிவந்தது. அதன்பிறகு பெரும்பாலான சிறுபத்திரிகைகளிலும் எனது கவிதை வெளியானது. எழுதி அதை அச்சில் பார்த்து புளகாங்கிதமடைகிற மனப்பெருக்கு தணிந்தது. 
பிறகு சிறுகதைகள் எழுதத் தொடங்கினேன். எழுதி எழுதி அழித்து எனக்கே திருப்தியுறாமல் கிழித்துப் போட்டேன் என்றால் அதற்குக் காரணம் என்னுடைய பரவலான வாசிப்பு. சிறுகதைகள் எழுதத் தொடங்கிய ஆரம்ப நாட்களிலேயே நான் எழுதுவதெல்லாம் சிறுகதையல்ல என்பதான அவநம்பிக்கை ஆழமாகத் தோன்ற ஆரம்பித்தது. பல முயற்சிகளுக்குப் பிறகு எனக்குத் திருப்தியளித்த என்னுடைய முதல் சிறுகதை ‘யமுனாவின் மனநோய்’ புதிய பார்வை இதழில் பாவை சந்திரன் ஆசிரியராக இருந்தபோது வெளிவந்தது. அதற்குப் பிறகான காலங்களில் எழுதிய கதைகளில் இதுவரை பதினான்கு சிறுகதைகள் வரை அச்சிலும், இணைய இதழ்களிலும் வெளியாகியுள்ளன. இருந்தபோதிலும் இன்றுவரை சிறுகதைகளில்  இன்னும் என்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றே முயற்சிகளைத் தொடர்கிறேன்.


‘அகநாழிகை’ சிறுகதைச் சிறப்பிதழாகவும், புத்தகமாகவும் வெளிவரும் இந்த முன்னுரையில் என்னைப்பற்றிய இந்த ஆரம்ப பீடிகைக்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் கவிதை எழுதுகிறவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. நீங்கள் தொடர்ந்து கவிதைகள் வாசிக்கிறவர் என்றால் இதை உணர முடியும். இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள படைப்பாளிகளில் பலரும் கவிதைகள் எழுதாதவர்கள். நேரடியாக புனைகதை வெளியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டவர்கள். 


முதல் சிறுகதைத் தொகுப்பாகவும், சிலர் முதல் படைப்பே நாவலாக எழுதி வெளிவருகிறவர்களாகவும் பலர் கடந்த சில ஆண்டுகளில் உருவாகியுள்ளனர். ஒரு கவிதை தருகிற கண நேரப் பரவசம் அலாதியானது. அதே சமயம் சிறுகதைகள் நிகழ்த்துகிற மனோலயங்கள் கூடுதலான வாசிப்பனுபவத்தைத் தருகின்றன. சிறுகதைகள் நம்முடைய வாழ்வில் நெடுங்காலம் வளைய வருகின்றன. நம் வாழ்க்கையில் நடக்கும் பல்வேறு சம்பவங்களின்போது மனம் அந்தக் கதைகளை நம்மையறியாமல் பொருத்திக்கொள்கிறது. நாவல் ஏற்படுத்தும் தாக்கத்தைவிட சிறுகதைகளின் வீச்சு அதிகம் என்பதே எனது கருத்து. 


வாழ்கிற நிலம், சூழல் சார்ந்த மக்களின் கதைகளை, வாழ்வின் யதார்த்தக் கூறுகளைப் பேசுகிற புனைவிலக்கியங்களை ஒதுக்கிவிட்டு எழுதப்படுகிற கதைகள் ஒருபோதும் இலக்கியமாவதில்லை என்பதை நான் நம்புகிறேன். சில கதைகளை வாசிக்கிறபோது அவற்றுடன் ஒன்றுபட்டு ஊடாடிச் செல்ல முடியாத விலகல் நிலை ஏற்பட இதுவே காரணம். வாழ்வின் அனுபவத்திலிருந்தும், அதன் அவலச் சுவையிலிருந்தும், சந்திக்கிற மனிதர்களிடமிருந்தும் பிறக்கிற எழுத்துகளே மனதுக்கு அணுக்கமாகிறது. ஒரு கதையை வாசிக்கிறபோது தன்னை அக்கதைக்குள் தானறியாமல் அடையாளங்கண்டு கொள்கிற நிலையே அக்கதையை சிறந்ததாகவும், மனதில் பதிவதாகவும் ஆக்குகிறது. புதிய, இளம் படைப்பாளிகளின் இந்தத் தொகுப்பை வாசிக்கிறவர்கள் இதில் இடம்பெற்றுள்ள கதைகள் இத்தகைய இலக்கிய நுட்பங்களின் செயல்திறனுக்குள் நின்று இயங்கக்கூடியவை என்பதை உணர்ந்துகொள்ளலாம்.


சமீபத்தில் (2016-17ல்) வெளிவந்த புதிய எழுத்தாளர்களின் சில சிறுகதைத் தொகுப்புகளை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தேர்ந்தெடுத்த புத்தகங்களை மட்டுமே படித்ததால், ஒன்றும் பிடிக்காமல் போகவில்லை. இந்நிலையில்தான், புதிதாக எழுதும் இவர்கள் எல்லோருமே மிகக் குறைந்த அளவே அறியப்பட்டவர் களாகவும், பத்திரிகைகளில் கதை வெளியாகும் வாய்ப்பு இல்லாதவர்களாகவும், அப்படியே இருந்தாலும் ஒன்றிரண்டு கதைகளை எழுதியவர்களாகவும், முதல் முறை அச்சேறுகிறவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது தெரிந்தது. தமிழ் இலக்கியச் சூழலில் மிகக் குறைவான சிற்றிதழ்களே தொடர்ந்து வெளிவருகின்றன. ‘அகநாழிகை’ போன்று எப்போதாவது வெளிவரும் இதழ்களும் உண்டு. அப்படியான நிலையில் இவர்கள் கதைகளை அனுப்பினார்களா அல்லது பிரசுர வாய்ப்பு கிடைக்கவில்லையா என்ற கேள்விகள் எழுகின்றன.


அன்றும் இன்றும் தமிழ் இலக்கியம் கோட்பாடுகளிலும், இஸங்களிலும் சிக்கித் தடுமாறிக்கொண்டிருக்கிறது. உலக இலக்கியத்தை வாசித்து அதையொட்டிய உத்திகளில் தமிழில் படைப்புகளை உருவாக்கியவர்களும், இங்கிருக்கிற இலக்கிய உத்திகளைக் கைக்கொண்டு எழுதியவர்களுமாக இரு பிரிவுகள் இருக்கிறார்கள். கோட்பாடு, இஸங்கள் என்றும், அழகியல், அவலம் என்றும் வெவ்வேறான சிறந்த கதைகள் தமிழில் வெளியாகியுள்ளன. இதில் கோட்பாடு இஸங்கள் என்ற கண்ணுக்குத் தெரியாத பொறியில் சிக்கிக்கொண்டு விவாதங்களும், சண்டைகளும், புறங்கூறல்களும் பெருகிக்கொண்டிருக்கின்றன. 


எத்தனை எழுத்தாளர்கள் புதிதாக எழுத வருகிறவர்களின் படைப்புகளைப் படிக்கிறார்கள் என்பது தெரியாது. எத்தனை பத்திரிகைகள் புதிய படைப்பாளிகளின் படைப்புகளைப் படித்து அதை வெளியிடுவதில் அக்கறை காட்டுகின்றன என்பது கேள்விக்குறி. ஓடுகிற குதிரையின்மீது அல்லது விரட்டி ஓட வைக்க முடியுமென்று நம்பிக்கை உள்ளவர்களின் மீதுதான் பதிப்பகங்களின் கவனமெல்லாம். புகழ், புகழ விடு என்பதான யத்தனிப்புகளாகவே இருக்கின்றன.


‘அகநாழிகை’ இதழை நீண்ட இடைவெளிக்குப் பிறகு கொண்டுவரும் எண்ணம் உதித்தது. முழுக்க புதிய, இளம் படைப்பாளிகளின் படைப்புகளுடன் சிறுகதைச் சிறப்பிதழாகக் கொண்டு வர நினைத்தேன். அதன் அடுத்த கட்ட மனநிலையில் அது வேறொரு யோசனையாகக் கருக்கொண்டது. சிறுகதைச் சிறப்பிதழை புத்தகமாகவே கொண்டு வந்துவிடலாம் என்று தோன்றியது. அப்படி உருவானதுதான் ‘விளிம்புக்கு அப்பால்’ என்ற இந்த சிறுகதைத் தொகுப்பு. இது அகநாழிகையின் சிறுகதைச் சிறப்பிதழ், அதேசமயம் சிறுகதைத் தொகுப்பு புத்தகமும் கூட. பதினான்கு புதிய, இளம் படைப்பாளிகளின் சிறுகதைகளை உள்ளடக்கியது இந்தப் புத்தகம். சமகால எழுத்தின் பிரயாசைகள், வகைகள், உத்திகள் என இளம் படைப்பாளிகளின் ஆற்றோட்டமான எழுத்தின் வாயிலாக இந்தத் தொகுப்பில் வாசித்து ரசிக்கலாம். 


தமிழில் முன்னுதாரணமாக ஏற்கெனவே பல தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. அ.சிதம்பரநாத செட்டியார் இரண்டு தொகுதிகளாக தொகுத்த ‘தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம்’ (1959) தொகுப்பை சாகித்ய அகாடமி வெளியிட்டுள்ளது. ‘கதைக் கோவை’ (பாகம் 1, 2, 3, 4) அல்லயன்ஸ் பதிப்பகம், ‘இந்த நூற்றாண்டுச் சிறுகதைகள்’ (பாகம் 1, 2, 3) தொகுப்பு: விட்டல்ராவ், (பாகம் 4, 5, 6) தொகுப்பு: விட்டல்ராவ், அழகியசிங்கர் (கலைஞன் பதிப்பகம்), ‘ஐம்பதாண்டு தமிழ்ச் சிறுகதைகள்’ (பாகம் 1, 2) தொகுப்பு: சா.கந்தசாமி (கவிதா பதிப்பகம்), ‘சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்’ (பாகம் 1, 2) தொகுப்பு: சா.கந்தசாமி (சாகித்ய அகாடமி), தலைவாழை (37 மூத்த தலைமுறை எழுத்தாளர்களின் சிறுகதைகள்) தொகுப்பு: இ.எஸ். தேவசிகாமணி (அன்னம் பதிப்பகம்), ‘தமிழ்ச் சிறுகதைகள்’ தொகுப்பு: க.நா.சுப்ரமண்யம், ‘இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதைகள் நூறு’ (5 பகுதிகள் - ஒவ்வொன்றிலும் 20 கதைகள்) தொகுப்பு: வீ.அரசு (அடையாளம் பதிப்பகம்), ‘அன்று’ (தொகுதி 1, 2) தொகுப்பு: மாலன் (ஓரியண்ட் லாங்மென் பதிப்பகம்), ‘ஒரு தலைமுறையின் 11 சிறுகதைகள்’ தொகுப்பு: மாலன் (வாசகன் இதழ் வெளியீடு), ‘பனியும் பனையும்’ (ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்களின் கதைகள்) தொகுப்பு: இந்திரா பார்த்தசாரதி, எஸ்.பொன்னுத்துரை (மித்ர வெளியீடு), ‘மீதமிருக்கும் சொற்கள்’ (1930 - 2014 பெண் எழுத்தாளர்களின் கதைகள்) தொகுப்பு: அ.வெண்ணிலா (அகநி பதிப்பகம்), ‘ 100 சிறந்த சிறுகதைகள்’  தொகுப்பு: எஸ்.ராமகிருஷ்ணன் (டிஸ்கவரி புக் பேலஸ்) போன்ற பல தொகுப்புகளும் (பட்டியல் முழுமையானது அல்ல), நகுலன் தொகுத்த ‘குருஷேத்திரம்’ சிறுகதைத் தொகுப்பும், ‘கோணல்கள் (ம.ராஜாராம், சா.கந்தசாமி, நா.கிருஷ்ணமூர்த்தி, ராமகிருஷ்ணன் ஆகிய நான்கு எழுத்தாளர்களின் 12 சிறுகதைகள்) (கவிதா பதிப்பகம்) ஆகிய தொகுப்புகளும் குறிப்பிடத்தகுந்தவை. 


இதுபோன்ற தேர்ந்தெடுத்த, தொகுக்கப்பட்ட பலரது சிறுகதைகளை உள்ளடக்கிய வட்டார வழக்கு, பெண்ணியம், தலித்தியம், இஸ்லாம் எழுத்துகள், கரிசல் எழுத்து, ஊர் சார்ந்த கதைகள், உலகத் தமிழர்களின் சிறுகதைகள் என பல தொகுப்புகள் வெளியாகியுள்ளன.


‘விளிம்புக்கு அப்பால்’ என்ற இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகள் வேறெந்த அச்சிதழிலும், இணையத்திலும் வெளியாகாதவை. இந்தக் கதைகளின் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் நாம் சந்திருக்கக்கூடியவர்கள்தான். அதுவே இந்தக் கதைகளோடு நம்மை நெருக்கமாக்குகிறது. இந்தப் புனைவுகளின் கதையாடலில் மறைந்திருக்கும், நேரடியான அர்த்தங்களைவிட அதன் நீட்சியாக நம்மைக் கவர்ந்திழுக்கும் அர்த்தப்பாடுகளே இந்தக் கதைகளின் மேன்மையையும், காலம் தாண்டியும் பேசப்படுவதற்கான நிலைத்த தன்மையையும் சாத்தியப்படுத்திக்கொள்கின்றன. வாழ்வின் சம்பவங்களோடு, பின்னிப் பிணைந்த பிரச்னைகளை, அவற்றை எதிர்கொள்ளலை நாம் அங்கீகரித்து உள்வாங்கிக்கொள்கிற விதத்தில் இந்தக் கதைகள் மிளிர்கின்றன. ஒவ்வொரு கதையைப் பற்றியும் நான் தனித்தனியாக, விரிவாகச் சொல்வதைவிட உங்கள் வாசிப்பின் அனுபவத்திற்கும் புரிதலுக்கும் அவற்றை முன்வைக்கிறேன். 
இந்தத் தொகுப்பிற்கு கதைகள் கேட்டதும் ஆர்வத்துடன் எழுதிக்கொடுக்க முன்வந்த படைப்பாளிகள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எப்போதும் என் செயல்பாடுகளுக்கு உந்துதலாக இருக்கும் என் மனதுக்கும் நன்றி. வாழ்வின் தீராப் பயணங்களை இருப்புக்குப் பிறகும் சாத்தியப்படுத்தும் எழுத்து, வாசிப்பு என்ற அற்புதங்களை வணங்குகிறேன். என்னுடைய காலத்தில் செய்த முக்கியமான பணியாக இந்தக் கதைகளைத் தொகுத்ததில் மகிழ்ச்சியடைகிறேன். சமகால எழுத்தின் போக்குகளை, புதிய தமிழ்ப் படைப்பாளிகளின் எழுத்துகளின் வாயிலாக அடையாளங்காண இந்தத் தொகுப்பு உதவும் என்று நம்புகிறேன்.                                         
பொன்.வாசுதேவன்
27.04.2017