
எழுத ஆரம்பித்த நாட்களில் ‘நான் பத்திரிகைகளில் எழுதுகிறேன்‘ என்று எழுதாதவர்களிடமெல்லாம் போய் சொல்லி, என் பெயர் வெளி வந்திருப்பதைக் காட்டி அவர்களெல்லாம் மகிழ்வார்கள் என்றெண்ணி... மாறாக அவர்கள் ஒவ்வொருவர் ஒவ்வொரு மாதிரியாக (இதெல்லாம் ஒரு சாதனையா, அப்படியா எழுதறீங்களா, அவரு பத்திரிகையில எல்லாம் எழுதுவாரு, அவர் அறிவுஜீவி, அவர் பத்திரிகைகாரர்... இதுல எவ்வளோ ஸார் பணம் கிடைக்கும் என்றெல்லாம்) என்னை புரிந்து கொண்டதுதான் மீதம். காரணம் நான் எழுதுவது எல்லோருக்கும் சந்தோஷமான விஷயம் இல்லை என்பதால்தான். இதை ரொம்ப தாமதமாகத்தான் உணர நேரிட்டது. அதன் பிறகு நெருங்கிய சிலரைத் தவிர, நான் எழுதுகிறேன் என்பதை வெளியே சொல்வதில்லை.
எழுதும் பழக்கமுடையவர்கள் மற்றும் படிக்கும் பழக்கம் உள்ளவர்கள் மட்டுமே எழுதுபவர்களை உண்மையாகப் புரிந்து கொள்கிறார்கள், விமர்சிக்கிறார்கள், சிலாகிக்கிறார்கள். இதுதான் என்றைக்குமான உண்மை. மற்றபடி எழுதிப் புகழ்பெற்ற பிறகு ஒரு எழுத்தாளனை தெரிந்தவராக காட்டிக் கொள்வதில் நமக்கு நிகர் நாமே.
ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது தாய், கல்கி, குமுதம் என பல்வேறு பத்திரிகைகளில் எழுதி, பத்திரிகையில் பெயர் வந்தாலே பேரின்பமாக எல்லோரிடமும் அதைக்காட்டி அற்ப சுகம் கண்டு கொண்டிருந்தேன். 10, 11, 12-ம் வகுப்புகளில் ‘கவிதைப் பூங்கா‘ என்றொரு கையெழுத்துப் பிரதி நடத்தி, கவிதை எழுதும் கர்வத்துடன் ‘காலரை‘ தூக்கிவிட்டுக் கொண்டு நடந்து கொண்டிருந்த எனக்கு, கல்லூரியில் திரு.சுப.வீரபாண்டியன் அவர்கள் தமிழ்ப் பேராசிரியராக கிடைத்தது ஒரு திருப்புமுனை.
கல்லூரியில் நான், என்னுடன் இரா.நரசிம்மன் (தற்போது ‘மாலைச்சுடர்‘ பத்திரிகையில்), கல்யாணராமன் (தற்போது நந்தனம் கல்லூரி) என ஒன்றாக எழுத ஆரம்பித்தோம். சுப.வீ.தான் ‘கணையாழி‘ பத்திரிகையைப் பற்றி முதல் முதலாக எங்களுக்கு கூறினார். பிறகு ‘கிரியா பதிப்பகம்‘ பற்றி தெரிந்து கொண்டு அங்கு செல்ல சரியான வழி தெரியாமல் அண்ணா சாலை முதல் இராயப்பேட்டை வரை நடந்து சென்றதெல்லாம் தனிக்கதை.
இதேநேரம் சென்னை இலயோலா கல்லூரியின் ‘கலை பண்பாட்டு இயக்ககம்‘ நடத்திய கவிதை, நவீன நாடகம், குறும்படம், படைப்பிலக்கியம் ஆகிய பயிற்சிப் பட்டறைகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்த பயிற்சிகளின் வழியே எழுதுவதில் அடுத்த கட்டத்திற்கான நகர்வு அமைந்தது. பிறகு 80களில் கலை இலக்கியம் என்ற தலைப்பில் ‘முன்றில்‘ (மா.அரங்கநாதன்) நடத்திய கருத்தரங்கில் மகாதேவன் ஆகியோரின் நட்பு கிடைத்து அதன் நீட்சியாக குறுகிய காலத்திலேயே கணையாழி, விருட்சம், மவ்னம், நவீன கவிதை என அப்போதைய சிற்றிதழ்களிலும், பின்னர் காலச்சுவடு, உயிர்மை, வடக்கு வாசல் என கவிதைகள் வெளியாக வாய்ப்பும் ஏற்பட்டது. அப்போதெல்லாம் கணையாழி கூட்டங்களில் தொடர்ச்சியாக கலந்து கொள்வோம். பிறகு சுந்தரபுத்தன், நா.கதிர்வேலன் என ஏற்பட்ட நட்பில் தமிழ் அரசி, புதிய பார்வை என தினந்தோறும் பத்திரிகை, பேட்டி, மொழிபெயர்ப்பு, இடைவெளி நிரப்பி (Column Filler) என தினமும் எழுதுவதே வாழ்க்கையாகி கொஞ்ச காலம் ஓடியது. அஜயன்பாலா, நா.முத்துக்குமார், யுகபாரதி, சினேகன் என நண்பர்கள் எல்லாம் அப்போதுதான் எழுத்துலகில் வருகிறார்கள். அதெல்லாம் கடந்த கால நினைவுகள். அந்த சந்தோஷமான நினைவுகளை இந்த ஒரு பதிவுக்குள் அடக்கிவிட முடியாது.
எழுதுவதிலும், பத்திரிகைக்கு கொடுப்பதிலும் ஆர்வம் சற்றே தணிந்து, வெறித்தனமாக புத்தகங்கள் வாசிப்பதில் ஈடுபாடு அதிகமாகியது. இரவு ஆரம்பித்தால் அதிகாலை 3 மணி வரை படித்துக் கொண்டிருந்த காலங்களும் உண்டு. தொடர்ந்து புத்தகங்கள் வாங்குவது வாசிப்பது என்றிருந்த காலத்தில் 2007 இறுதியில் அகலப்பட்டை இணைப்பு எனக்கு கிடைத்தது.
பல்வேறு வலைப்பக்கங்களை படிக்கும் வாய்ப்பு இதன் வாயிலாக ஏற்பட்டது. ஆரம்ப நாட்களில் ‘கீற்று‘, ‘தீம்தரிகிட‘ திண்ணை, போன்றவற்றை படித்துக் கொண்டிருக்கும்போது, தனியே வலைப்பக்கங்கள் இருப்பது தெரிய வந்தது. கணிப்பொறியைப் பொறுத்தவரை எனக்கு தொழில்நுட்ப ரீதியாக எதுவும் தெரியாது. பிறகு சோதனை முயற்சியாக ‘அகநாழிகை‘ என்று ஒரு வலைப்பக்கத்தை உருவாக்கி, ஒரு கட்டத்தில் தவறாக ஏதோ செய்து பதிவுகள் அழிந்து போனது. எவ்வளவோ முயற்சித்தும் திரும்ப வரவைக்க முடியவில்லை. பிறகு மறுபடியும் ‘aganaazhigai’ என ஒரு வலைப்பக்கத்தை உருவாக்கி இப்போது உள்ளதெல்லாம் அதன் பிறகு எழுதிய பதிவுகள்.
வலைப்பக்கங்களில் ஒரு சவுகரியம் என்னவென்றால் படிக்கிறவர்களையும், எழுதுபவர்களையும் மட்டுமே பதிவுகள் சென்றடைகின்றன. வாசிப்பவருக்கு மட்டுமே விமர்சிக்கும் வாய்ப்பு கிடைப்பதால், மற்றவர்களிடம் ‘எழுதுகிறேன்‘ என்றெல்லாம் கூறி சங்கடப்படவோ, சங்கடப்படுத்தவோ வேண்டியதில்லை.
வலைப்பக்கங்களால் கிடைக்கும் மற்றொரு நன்மை நட்பு வட்டம். எங்கோ இருக்கும் உமாசக்தி, கார்த்திகைப் பாண்டியன், ஆதவா, ஷீ-நிசி, அனுஜன்யா, உண்மைத்தமிழன், அதிஷா, முரளிகண்ணன், நர்சிம், பரிசல்காரன், சொல்லரசன், வால்பையன், காருரன், தாமிரா, ஹேமா, வேத்தியன், அத்திரி, ரசனைக்காரி(ராஜேஸ்வரி), ஹாலிவுட் பாலா, நட்புடன் ஜமால், கார்க்கி, வண்ணத்துப் பூச்சியார், வடகரை வேலன், தாரணிப்ரியா, லதானந்த், யுவகிருஷ்ணா, செல்வேந்திரன், இராகவன் நைஜரியா, பொடிப்பொண்ணு, ச.முத்துவேல், தேவன்மயம், வினோத் கௌதம், தீபா, வெங்கட்ராமன், சுரேஷ், கலை-இராகலை, அன்பு, அனுபவம், ரவீந்திரன், அன்புசிவம், விக்னேஸ்வரன், அ.சலீம்பாஷா, குப்புசாமி, தமிழ்க்குடும்பம், இமைசோரான், லவ்டேல் மேடி என இன்னும் பலர்... இவர்களுடைய பதிவுகளையெல்லாம் நான் படித்து, எனது பதிவுகளை இவர்கள் படித்து... ஆச்சரியமாக இருக்கிறது.
மேற்கண்ட பதிவர்களில் உமாசக்தி, ஷீ-நிசி...யைத் தவிர வேறு யாரையும் நான் நேரில் சந்தித்தது கூட கிடையாது. கார்த்திகைப்பாண்டியன், ஆதவா, சொல்லரசன் என சிலருடன் தொலைபேசித் தொடர்பு உண்டு. எங்கோ இருந்து கொண்டிருக்கும் முகம் தெரியாத இவர்களையெல்லாம் ஒரு நேர்கோட்டில் இணைய வைப்பதன் சாத்தியம் எப்படி நிகழ்கிறது. மனங்களின் சந்திப்பு எழுத்துகளின் வழியாகவே கூடுவிட்டு கூடு பாய்கிறது. ஒவ்வொரு பதிவும் அடுத்தவர்கள் படிக்கிறார்களோ இல்லையோ நமக்குள்ளிருக்கும் எண்ணங்களை வெளிக்கொணர்வதற்கான ஒரு முயற்சியாகவே இருக்கிறது.
சரிப்பா.. எதுக்கு இந்த ‘பில்டு அப்‘ எல்லாம் என்னும்
எனது அன்பான, பொறுமைசாலியான பதிவுலக எழுத்தாள நண்பர்களுக்கு... விஷயத்திற்கு வருகிறேன்.
நண்பர் ஷீ-நிசி ‘பட்டாம்பூச்சி விருது‘ என்று எனக்கு ஒன்றைத் தந்து விட்டார்.
அநேகம்பேரின் வலைப்பக்கங்களில் நான் அது பறப்பதை பார்த்திருக்கிறேன். இந்த விருதை ஏன் தருகிறார்கள்... எப்படி தேர்வு செய்கிறார்கள்... யார் ஆரம்பித்தார்கள் என்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள் எல்லாம் எனக்குத் தெரியாது. ஆதிநாட்கள் முதலாக பதிவுகள் பதிந்து, படிவமாகிப் போயிருக்கும் சக நண்பர்களுக்குத் தெரிந்திருக்கலாம், (இதை ஆரம்பித்தது யார் என்று ஒரு பதிவ போடுங்கப்பா...) சரி.. பட்டாம்பூச்சி விருது கொடுத்ததோடு அதை இன்னும் மூன்று பேருக்கு கொடுக்க வேண்டும் என்று அழகான ஒரு விதிமுறை ஏற்படுத்திய புண்ணியவான்(ள்) யார் என்று தெரியவில்லை. அந்த வழக்கப்படி நானும் மூன்று பேருக்கு கொடுக்க வேண்டும். முதலில் தெரிந்தவர்கள்... அடுத்ததாக அடிக்கடி வாசிப்பவர்கள்... என பட்டாம்பூச்சி விருது வாங்கிய ஒரு வாரமாக நானும் தேடுகிறேன். பட்டாம்பூச்சியைக் கூட எளிதாக பார்த்துவிடலாம்... பட்டாம்பூச்சி விருது வாங்காதவர்களை தேடுவது எனது சிற்றறிவிற்கு உட்பட்ட வகையில் மிகவும் கடினமாக இருந்தது.
ஒருவழியாக தேர்ந்தெடுத்து விட்டு விருதை கொடுக்க பதிவு எழுத ஆரம்பிக்கும்போதுதான் மேலே ஆரம்பத்தில் சொல்லிக்கொண்டு வந்த எனது பெரிய (சுய) புராணமெல்லாம் ஊற்றாக பெருக்கெடுத்தது. விருது கொடுக்கும் போது அழுது வழிய வேண்டாமே என்றுதான் இதை மேலும் மூன்று பேருக்கு கொடுத்து சந்தோஷப்படும் வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
and now the ‘Butterfly Award’ goes to... என்று நீங்கள் சொல்வதற்கு முன்பாக...
மறுபடியும் சில விஷயங்கள்...
இன்று (31 மார்ச்) எனக்கு பிறந்த நாள். (ஒரு நாள் தள்ளிப் பொறந்திருந்தா உலகமே ஏமாந்து போயிருக்கும்)
தாய், தந்தைக்கு மகளாக, உடன் பிறந்தோருக்கு சகோதரியாக, கணவனுக்கு மனைவியாக மட்டுமே இருந்து வாழ்க்கையை அர்த்தப்படுத்தி வாழ்ந்து கொண்டிருந்த ‘மீனாட்சி‘ என்ற என் அம்மாவை தாயாக உலகிற்கு அடையாளப்படுத்தியதற்கான பெருமையுடனும், கர்வத்துடனும், (அவர்கள் இப்போது உலகில் இல்லையென்றாலும்) என்னை உலகிற்கு அளித்த தாயை எனது பிறந்த தினத்தில் கௌரவப்படுத்தும் வாய்ப்பு கிடைத்தற்காக உளம் மகிழ்ந்தும், பட்டாம்பூச்சி விருதை பின்வரும் சக பெண் பதிவர்களுக்கு அளிக்கிறேன்.
அக்டோபர் 2004 முதல் பதிவுகள் எழுதி வரும் தோழி உமா, கவிதை, கதை, அனுபவம், உலக சினிமா, புத்தக விமர்சனம் என அனைத்து தளங்களிலும் பரவலாக எழுதி வருபவர். தீவிர வாசிப்பு முனைப்பினை உண்டாக்கும் இவரது எழுத்துக்களில் ஒரு ஈர்ப்பு இருக்கும். தெளிவான நடை, கவனமான வார்த்தைக் கோர்ப்பு என இவரது எழுத்துக்களை வாசிக்கும் அனைவருக்குமே ஈர்ப்பு அனுபவம் வாய்க்கும். குடும்பம், பணி, எழுத்து, நட்பு வட்டம் எல்லாவற்றிலும் உமா காட்டும் அக்கறையும், ஆர்வமும் குறிப்பிடப்படவேண்டியது.
ரசனைக்காரி http://moodupani.blogspot.com/
‘ரசனைக்காரி‘ என்ற பெயரில் எழுதும் தோழி ராஜேஸ்வரி கதை, கவிதை, சிந்தனைகள், சினிமா என கதம்பமாக எழுதி வருபவர். மனதில் பட்டதை அப்படியே எழுதும் இவரது எழுத்துக்களின் நடை மிக இயல்பாக இருக்கும். கொஞ்ச காலமாகத்தான் வலைப்பக்கங்களில் எழுதி வருகிறார். இவரது பதிவுகள் இன்னும் நிறைய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துகிறது.
தீபா http://deepaneha.blogspot.com/
மென்மையான உணர்வுகளை பகிர்ந்து கொள்வதில்தான் எத்தனை சந்தோஷம். அதிலும் ஒரு நிகழ்வை நாம் உணர்கிற அதே புரிதலுடன் நம் எழுத்தின் வாயிலாக வாசிப்பவரையும் உணர வைப்பது எத்தனை பேருக்கு சாத்தியமாகிறது. தீபாவின் பதிவுகளில் இதை உணர முடிகிறது. அம்மாச்சியை கவர்ந்தவர் எனக்கூறி வித்தியாசமாக பதிவதிலும், தாயாக தன் குழந்தையை கொண்டாடுவதிலாகட்டும், சமுக அக்கறையோடு சரியான தொடுதல் எது... தவறான எது என எழுதுவதிலாகட்டும் தீபாவின் எழுத்துக்கள் சிறந்து விளங்குகின்றன. என்னைப் பொறுத்தவரையில், சராசரிக்கும் அப்பாற்பட்டு செயல்படும் இவரது சிந்தனைக்களம் பாராட்டுக்குரியது.
பட்டாம்பூச்சி விருது பெற்ற 1. உமாசக்தி 2. ரசனைக்காரி 3. தீபா மூவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.
என்னுடைய இந்த மிக நீண்ட பதிவை மிகவும் பொறுமையுடன் வாசித்த நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.
- பொன். வாசுதேவன்








