நான் (மட்டுமே) கடவுள்'
ஒருமையான நான் பலவாகவும் ஆகிறேன்' ("ஏகோஹம் பஹோஸ்யம்") என்பதன் அதீத நிலையில் திரியும் ருத்ரன் (ஆர்யா), தந்தையின் புறக்கணிப்பு பற்றிய வெறுப்பு, தாயின் பாசம் குறித்த உணர்வு ஏதுமற்று தற்குறியாய் சுற்றி வருகிறார். அரவிந்தர் முதற்கொண்டு காந்தி வரை வேத தத்துவயியலாளர்கள் அனைவரையும் ஈர்த்த 'ஈசாவாஸ்யம்' தத்துவத்தின் வெளிப்பாடான 'அசூர்யா' (இருளில் இருந்து) அக வெளிச்ச தேடலை நோக்கி பயணிக்கிற ருத்ரன் படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை. விளிம்பு நிலை வாழ் மக்களின் மன ஓட்டங்களும் அவர்களுக்குள் இழையோடும் நகைச்சுவை உணர்வும் காட்சிப்படுத்தலும் இடையிடையே நிகழ்கிறது.
தந்தையால் நிராகரிக்கப்பட்டு மரணத்தின் வாயிலுக்கு சென்று எமனையே எள்ளி மீண்ட 'நசிகேதன்' கதையை அப்படியே நவீனப்படுத்தியிருக்கும் ஜெயமோகன், அதன் முழுமை கூறுகளுடன், தான் மனச்சிதைவிற்கு உள்ளாகி போக்கற்று திரிந்த காலங்களின் அனுபவத்தை வைத்து எழுதிய "விஷ்ணு புரம்" "பின் தொடரும் நிழலின் குரல்" "இந்து ஞான மரபில் ஐந்து தரிசனங்கள்" இவற்றின் நீட்சியாக "ஏழாவது உலகம்" ஆகிய புத்தகங்களில் இருந்து கதை கருவையும், களனையும் எடுத்துக்கொண்டுள்ளார். திரைபடத்தின் இயக்குனரும், கதையும் கட்சியின் இருமுனைகளை போல கூர்மையானவை.
இதை உறுதிபடுத்துகிறார் பாலா. மென்மையான, நுண் அழகியல் திறன் கொண்டவரான பாலா அதிகம் பேசாதவர் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். இதனாலேயே பல மன அதிர்ச்சிக்குள்ளாக்கும் காட்சிகளை அவரால் சிந்திக்க முடிகிறது. மனதின் வன்முறை பல கோணங்களில் கற்றையாகி பிரிந்து ஒளிப் பொடிகளாக சிதையும் சூழல்களை பாலாவின் படமும் தருகிறது. பிதாமகன், சேது போன்ற படங்களில் நாம் கண்ட குரூரமும், வன்முறையும், அழகியலும் ரசிக்கப்பட்டதற்கான காரணம் நம் மனதில் வேரூன்றி இருக்கும் ஆதி மனிதனின் வேட்டையாடும் மனோபாவம் தான்.
சில ஆண்டுகளுக்கு முன் "ஏழாம் உலகம்" புத்தகத்தை படித்தவுடன் பிச்சையிடுவதை நிறுத்திவிட்டேன். காரணம் பிச்சை தொழிலில் இருப்பவர்கள் பலரும் தன் விருப்பத்துடன் ஈடுபடுபவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான். அந்த அளவிற்கு விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை பற்றி எழுத்தில் கொண்டு வந்தது ஜெயமோகனின் வெற்றி. இதன் பின்புலமாக அவருடைய வாழ்வில் பிச்சை பெருபவர்களுடன் பழகி, உண்டு, உறங்க சூழல் அவருக்கு வைத்தது. "எழுதும்போது மட்டுமே நான் தொல்வியற்றவன்... துயரில்லாதவன்" என்று நடைமுறை வாழ்க்கையில் தனக்கு இருக்கும் குற்றவுணர்ச்சியை கூறியிருக்கிறார் ஜெயமோகன்.
"நான் கடவுள்" படத்தில் இளையராஜாவின் இசையை தவிர குறிப்பிடும்படியான காட்சியமைப்பு ஒன்றுமில்லை. ஆர்யா என்ற கலைஞனின் மூன்றாண்டுகள் மழிக்கப்படாத மயிர் மட்டுமே நீண்டு கிடக்கிறது படம் நெடுக.... படத்தின் உச்சகாட்சியில் 'அம்சவல்லி' (பூஜா) பேசும் நெடும் வசனம் தேவையற்றது. படம் முழுக்க நீளும் சமஸ்கிருத, வசனங்கள் பார்வையாளனை குழப்பத்திற்கு உள்ளாக்குகிறது.
'slumdog millionaire' படத்திலும் விளிம்பு நிலை மக்கள் பிச்சை தொழிலில் ஈடுபடுத்த படுவதை பற்றி காட்சிகள் வருகிறது. வன்முறை குரூரம் அதிலும் வருகிறது. விளிம்பு நிலை மக்களை காட்டி அனுதாபப்பட வைப்பதை விட அருவெறுப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது பாலாவின் காட்சியமைப்பு. இவர்களிஎல்லாம் காட்டி சம்பாதித்துவிடலாம் என்று எடுத்துள்ளனர் பாலாவும், ஜெயமோகனும்.
இளையராஜாவும் ரொம்ப சிம்பிளாக, பழைய பாடலை ரீமேக் செய்துள்ளார். ஆடியோவில் இருந்த சில பாடல்கள் இதில் இல்லாதது ஒரு குறை. ராஜாவின் 'ரமண மாலை' மிகவும் அருமையான தொகுப்பு. அதிலிருந்து 'பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்' பாடலை இந்த படத்திற்கு பயன்படுத்தியிருக்கிறார் இளையராஜா. ஆனால் அசல் பாடலின் ஜீவன் இதில் இல்லை. மனதை உருக்கும் பாடல் அது. குறிப்பிட படவேண்டியவர் ஆர்தர் வில்சன் அவரது உழைப்பு வீண் போகவில்லை. அதேபோல கவிஞர் விக்ரமாதியத்யனின் நடிப்பும்.
திறன் வாய்ந்த பலரின் மூன்று வருட உழைப்பு வீணடிக்கப்பட்டு இருப்பது மட்டுமே இப்படத்தின் பலன்.
